ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.


ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்:


சென்னை அசோக் நகரில் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு வழக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள், கைப்பற்றப்பட்ட சொத்து உள்ளிட்டவை தொடர்பாக விளக்கமளித்தார்.  ”ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். 40 பேரை குற்றவாளியாக சேர்த்துள்ளோம். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட்டில் ஏ7 ராஜசேகரின் மீதுள்ள 11 சொத்துகள் உட்பட 49 சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ளதன்படி அந்த சொத்துகளின் விலை 23 கோடி ரூபாய். அதேநேரம், அவற்றின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருக்கும்.   ஹிஜாவு வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கில் 139 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஐஎஃப்எஸ் நிறுவன வழக்கில் மொத்தம் 132 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன” பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் விளக்கமளித்தார்.


ஆருத்ரா மோசடி:


ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது









மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.


நடிகர் ஆர்.கே. சுரேஷ் சிக்கியது எப்படி ? 


முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆருத்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைதான, ரூசோ நடிக்கும் திரைப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பதும் சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தன்னை குட்டி பிரபலமாக நினைத்துக் கொண்டு சுற்றி திரிந்த ரூசோவிடம், விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது, ஆர்.கே. சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், இந்த வழக்கில் இருந்து , தானும் தனது நண்பர்களும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக, 12 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் , இன்னும் சில கோடிகளை செலவு செய்தால், இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடலாம் என ஆர் .கே சுரேஷ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரூஸோ கைதான தகவலை அறிந்தவுடன், நடிகர் சுரேஷ், துபாய் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது, உறுதியாகியுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்