மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் என்பவரின் மகன் 20 வயதான ராஜ்குமார். இவர் கட்டுமான பணியில் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை, அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் ராஜ்குமாரை தேடியுள்ளனர். இந்த சூழலில் நேற்று காலை மயிலாடுதுறை அருகே மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  




இதுகுறித்து தகவல் அறிந்த  மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 




விசாரணையில் மயிலாடுதுறை சித்தர்காடு தெற்குவீதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் மகன் 22 வயதான கபிலன் மற்றும் குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் ராஜ்குமாரை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து வீட்டில் பதுங்கியிருந்த கபிலன் மற்றும் சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து மயிலாடுதுறை தனிப்படை போலீசார் விசாரணை அவர்களிடம் செய்த விசாரணையில் அந்த வாலிபர் மறையூறைச் சேர்ந்த ராஜ்குமார் என்பதும், கட்டிட வேலை செய்யும் சித்தாள் வேலைக்கு சென்று வருவதும் தெரிந்தது. அவரை சித்தர்காடு தெற்க்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகன்  கபிலன் என்பவரும் பள்ளி பயிலும் மாணவர் ஒருவரும் முதல் நாள் இரவு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. 




இதனை அடுத்து கொலை சம்பந்தமாக கபிலன் மற்றும் பள்ளி மாணவனை கைது செய்த தனிப்படை போலீசார் ரயில்வே காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.  அவர்கள் கொலைக்கான காரணம் குறித்து கொலையாளிகளை விசாரித்த போது, அவர்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தது. கொலையாளி கபிலன் மற்றும் பள்ளி மாணவன் இருவரும் இணைந்து ரயில்வே லைன் பகுதியில் ராஜ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை தன்பாலின ஈர்ப்புக்கு  அழைத்துள்ளனர். அதற்கு மறுத்துவிட்டு ராஜ்குமார் தப்பி ஓடிய போது பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கியும், காயம் அடைந்து கீழே விழுந்தவரை கற்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கொலையை மறைக்க பிணத்தை தண்டவாளத்தின் நடுவே போட்டுள்ளனர். மெலிதான உருவம் என்பதால் தண்டவாளத்தில் நடுவே கிடந்த உடல் ரயில்களில் அடிபட்டு சிதையாமல் கிடந்துள்ளது. இதனால் கொலையை தற்கொலையாக்க முயற்சித்த நாடகம் அரங்கேறாமல் கொலையாளிகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற