புதுச்சேரி: முதல் மனைவி என்று கூறி பாஜக சட்ட மன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது சென்னையை சேர்ந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்ட மன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம். இவரை தனது கணவர் என்று கூறிக்கொண்டு சென்னையை சேர்ந்த எல்லம்மாள் (வயது 35) என்ற பெண், 2 குழந்தைகளுடன் புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரது புகாரை ஏற்க மறுத்த போலீசார் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி புதுவை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு எல்லம்மாள் வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் சென்னை ராமாபுரம் எல்லம்மாள் கார்டனில் வசிக்கிறேன். எனக்கு 16 வயது இருக்கும் போதே கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வை தெரியும். அவர் வாகன உதிரிபாக விற்பனை கடை வைத்துள்ளதால் பொருட்கள் வாங்க அடிக்கடி சென்னை வருவார். நான் அவர் பொருட்கள் வாங்கும் கடைக்கு அருகில் உள்ள டைப்ரைட்டிங் சென்டருக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந்தேதி சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைத்து என்னை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்குக் கூட அவரது குடும்பத்தினர் வரவில்லை. ஒருசில நண்பர்கள் மட்டும் வந்திருந்தனர்.
அதன்பின் அவர் என்னை கோரிமேடு கலைவாணர் நகருக்கு அழைத்து வந்து ஒரு வீட்டில் தங்கவைத்தார். 1½ வருடத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நான் சென்னையில் உள்ள தாய் வீட்டில் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு தெரியாமல் அவர் 2-வது திருமணம் செய்துகொண்டார். பல மாதங்கள் கழித்துதான் அது எனக்கு தெரியவந்தது. அவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது உன்னை கைவிட மாட்டேன் என்று உறுதியளித்தார். அதன்பின் 2-வது ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்கிடையே அவரது 2-வது மனைவி எங்களை பிரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். 2-வது திருமணம் செய்தது தொடர்பாக நான் வழக்கு ஏதும் தொடரவில்லை. எங்களது வாழ்வாதாரத்துக்காக அவர் மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கினார். பின்னர் ரூ.25 ஆயிரமாக வழங்கி வந்தார்.
இப்போது சில மாதங்களாக அந்த தொகையையும் தரவில்லை. வீட்டு வாடகை கொடுக்க கூட எங்களுக்கு வழியில்லை. இதுதொடர்பாக கேட்க இங்கு வந்தோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் அவர் புதுவையில்தான் உள்ளார். நான் கொடுத்த புகாரை போலீசார் வாங்கவில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளேன்” என எல்லம்மாள் கூறினார். இது தொடர்பாக சட்ட மன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. சிலர் இதை தூண்டிவிடுகிறார்கள் என்று மட்டும் தெரிவித்தார்.