ஹரியானாவின் ஆரவல்லி மலைப் பகுதியில் ஒரு டிராலி பையில் இருந்து மனித உடலின் பாகங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது ஷ்ரத்தா வழக்குடன் தொடர்புடையதாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சூட்கேஸில் உடல் பாகங்கள்


கொடூரமான ஷ்ரத்தா கொலை வழக்கின் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று (நவம்பர் 24), ஃபரிதாபாத்தின் சூரஜ்கண்டில் உள்ள பாலி சாலைக்கு அருகிலுள்ள ஆரவல்லி மலைப் பகுதியில் ஒரு டிராலி பையில் இருந்து மனித உடலின் பாகங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சூட்கேஸ் பற்றிய தகவலைப் பெற்ற இரண்டு குற்றப்பிரிவு குழுக்கள் மற்றும் ஒரு தடயவியல் குழு வியாழக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.



வேறு இடத்தில் செய்யப்பட்ட கொலை


அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் சடலத்தின் ஒரு பகுதியை வீசியிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். "பரிதாபாத்தின் சூரஜ்கண்டில் உள்ள வனப்பகுதியில் நேற்று உடல் உறுப்புகளுடன் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. முதல் பார்வையில், ஒரு நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் உடலின் ஒரு பகுதி இங்கு வீசப்பட்டதாகத் தெரிகிறது" என்று ஃபரிதாபாத் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: இன்னும் சிங்கிளாக இருப்பது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த அதர்வா!


சுற்றிவளைத்து போலீசார்


சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட வனப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர், "உடல் பாகங்கள் பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு சாக்கு பையில் சுற்றப்பட்டிருந்தன. சூட்கேஸ் அருகே உடைகள் மற்றும் பெல்ட் மீட்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது", என சுபே சிங் தெரிவித்தார். தடயவியல் குழு ஆய்வு செய்த பின்னர் சூரஜ்கண்ட் காவல் நிலைய அதிகாரிகள் உடல் உறுப்புகளை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். 






ஷ்ரத்தா கொலை வழக்கில் எந்த தொடர்பில்லை


துணை போலீஸ் கமிஷனர் (பரிதாபாத் என்ஐடி) நரேந்தர் காடியன் கூறுகையில், "உடல் உறுப்புகள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் உடல் உறுப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட டெல்லி காவல்துறையின் குழுவும் சம்பவ இடத்துக்குச் சென்றது. பின்னர், உதவி கமிஷனர் போலீஸ் (மெஹ்ராலி) வினோத் நரங், ஷ்ரத்தா வாக்கர் வழக்குக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிராகரித்தார். இந்த உடல் பாகங்கள் சுமார் இரண்டு மாதங்கள் பழமையானவை என்றும், சடலம் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். தடயவியல் குழு உடல் உறுப்புகளை பரிசோதித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.