உத்திரமேரூர் அருகே குண்ணவாக்கம் பகுதியில் நேற்று வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தீ மள மளவென பரவி லாரி முழுவதும் எரிந்து சேதமானது.
திடீரென லாரியிலிருந்து மின் கசிவு
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா மலையாங் குளம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. வைக்கோல் லாரி உத்திரமேரூர் அருகே குன்னவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது திடீரென லாரியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.
தீ மள மளவென தீப்பற்றியது
உடனடியாக லாரியின் உரிமையாளரும் டிரைவருமான ரமேஷ் மற்றும் அவருடன் வந்த முருகன் ஆகிய இருவரும் கீழே இறங்கி பார்த்த பொழுது தீ மள மளவென தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை
தகவல் அறிந்து உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து தீயணைப்பு துறைவினர் தெரிவித்ததாவது : எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு செல்லும்பொழுது சற்று ஜாக்கிரதையாக கொண்டுசெல்ல வேண்டும். பழுதடைந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லும்பொழுது, வாகனங்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தால் கூட சில சமயங்கள் தீப்பற்ற வாய்ப்புள்ளது. எனவே உரிய பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ,விசாரணையின் முடிவிலேயே இந்த தீ விபத்து எப்படி நடைபெற்றது என தெரிய வரும் என கூறினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்