சென்னையில் சாலையோரத்தில் படுத்திருந்தவர் மீது எம்.பியின் மகள் கார் ஏற்றி விபத்தை ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெசண்ட் நகர் ஊரூர் குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் பெயிட்டராக பணி செய்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னரே வினிதா என்பவருடன் திருமணம் ஆனது. வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது சூர்யா மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.



சூர்யா


நொடி பொழுதில் நடந்த சம்பவம்


இந்நிலையில், நேற்று முன்தினம் மதிய நேரத்தில் பெசண்ட் நகார் காலாசேத்ரா காலனி அருகே உள்ள நடைபாதையில்  சூர்யா படுத்து உறங்கியுள்ளார். சற்று தூக்கம தெளிந்தபின்னர் வீட்டிற்கு செல்லலாம் என்று எழுந்த சூர்யா, நிலைதடுமாறி நடைபாதையை ஒட்டிய சாலையில் விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சாலையில் வந்த புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட சொகுசுகார், நொடி பொழுதில் சாலையில் இடறி விழுந்த சூர்யாவின் மீது மோதி, ஏறி, இறங்கியது. காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள், சூர்யா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் சூர்யா அருகே நின்றுகொண்டு இன்னொருவர் காரை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் கடந்து நிறுத்தியுள்ளார்.


சம்பவ இடத்தில் திரண்ட மக்கள் – பரபரப்பான காலனி


ரத்த வெள்ளத்தில் சூர்யா துடித்துக்கொண்டிருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். சூர்யாவின் ஊரூர் குப்பம் பகுதி மக்களும் அதே இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் காரை ஏற்றிய அந்த பெண்ணிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அந்த பெண், மக்களை பார்த்து மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. ‘என் மீது தவறில்லை என்றும் அவர்தான் சாலையில் வந்து விழுந்தார்’ எனவும் அந்த பெண் சொல்வதை கேட்காத பொதுமக்கள், அவரிடம் கடும் கோபம் அடைந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், நான் யார் தெரியுமா? பெரிய இடம். இதையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ள கூடாது என்ற தொனியில் பேசியுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவசர வாகனத்தில் அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.


காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்


இதனால் ஆத்திரமடைந்த குப்பம் பகுதி மக்கள் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சூர்யா மீது கார் ஏற்றிய பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.


யார் அந்த பெரிய இடத்து பெண் ?


காரை ஏற்றிய அந்த பெண் தான் பெரிய இடத்தை சேர்ந்தவர் என் மீது தவறில்லாததால் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என பேசியது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் அந்த பெரிய இடத்து பெண் பற்றி விசாரித்துள்ளனர்.  அப்போது, விபத்திற்கு காரணமான பெண் அடையாறு பெசண்ட் நகர் அவென்யூவை சேர்ந்த பீடா மாதுரி என்பதும் அவரது தந்தை ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி என்பதும் அவர் பெயர் பீடா மஸ்தான்ராவ் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவரது இல்லம் சென்று காவல்நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் கொடுத்தனர்.


ஆஜரான எம்.பி.மகள் – கைது செய்யப்பட்டு விடுதலை


காவல்நிலையத்தில் நேற்று பிற்பகல் ஆஜரான எம்.பி. மகள் பீடா மாதுரி மீது கவனகுறைவாக வாகனம் ஓட்டுதல், அலட்சியமாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், கொலைக்கு தொடர்பில்லா குற்றம என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரது வழக்கறிஞர்களின் பிராமண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு காவல்நிலைய ஜாமீனில் அவரை வெளியே விட்டனர்.