Atrocities On Dalits: தெலங்கானவில் பட்டியலினத்தவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தெலங்கானாவில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்:
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியில் மாவட்டம் ஷெட்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா பாபு. ஷெட்பள்ளியில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த ஒருவர் சட்டையை பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார். அதோடு இல்லாமல் அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனித உரிமை அமைப்புகள் மற்றும் தலித் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்ததை அடுத்து, பட்டியலினத்தவரை தாக்கிய ராமரெட்டி என்று அடையாளம் காணப்பட்டு, அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
காரணம்:
விவசாயி துர்கா பாபு எப்போது தனது மாடுகளை மேய்தலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இப்படி இருக்கும் நிலையில், சம்பவத்தன்று மாலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மாடுகள் ராமரெட்டியின் வயவெளிக்குள் சென்றுள்ளது. இதனை பார்த்த ராமரெட்டி மாடுகளை அடித்து விரட்டியுள்ளார். மேலும், அங்கு துர்கா பாபுவையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, துர்கா பாபுவின் வீட்டிற்கே சென்று அவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.