கரூரில் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அரசு கல்லூரி உதவி பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர் பணி புரிந்தவர்  இளங்கோவன். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி கல்லூரியில் படிக்கும் மாணவிகளை உதவி பேராசிரியர் இளங்கோவன் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.




இந்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதவி பேராசிரியர் இளங்கோவன் கைது செய்தனர். இளங்கோவன் மீது பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியது, தீண்டாமை வன்கொடுமை, பொது இடத்தில் அவமானப்படுத்துவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் தாந்தோன்றிமலை  போலீசார் வழக்கு பதிந்தனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X




இது தொடர்பான தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஐந்து மாணவிகளை உதவி பேராசிரியர் இளங்கோவன் பாலியல் ரீதியில் துன்புறுத்தியது நிரூபணம் ஆனது. 5 மாணவிகளின் புகாரின் அடிப்படையில் தலா 5 பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளில் தனித்தனியாக தண்டனை விதித்து மொத்தம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்கும் தலா 5 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.


பின்னர் இந்த தீர்ப்பு குறித்து கல்லூரியின் மாணவர்கள் மாவட்ட அமர்வு நீதிமன்ற வாசலில் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அப்பொழுது நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு, இதற்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து சென்றனர்.




தமிழகத்தில் தற்போது பள்ளியில் ஆன்லைன் வகுப்பு மூலம் அந்தரங்கமாக பாலியல் சீண்டல் ஏன தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது கரூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் தொடர்பாக வழக்கில் ஐம்பத்தி மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்த தீர்ப்பால் இனிவரும் காலங்களில் இதுபோல் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்பது இந்த வழக்கின் மூலம் நிரூபணமாகி உள்ளது.