டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன. இதனால் அறியாமையால் பல தவறுகளும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் நட்பாகப் பழகிய ஒருவரைச் சந்திக்க டெல்லிக்கு வந்த பிரிட்டிஷ் குடிமகள், மஹிபால்பூர் ஹோட்டலில் அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கைலாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த கைலாஷ் என்பவருக்கும் பிரிட்டிஷை பூர்வீகமாக கொண்ட ஒரு இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் நன்றாக பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண் விடுமுறையை ஒட்டி சுற்றுலா செல்ல ப்ளான் செய்துள்ளார். அப்போது இந்தியா செல்லலாம் என முடிவு செய்துள்ளார். எனவே இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கோவாவை விடுமுறைக்காக சுற்றுலா இடமாக தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து இந்தியா வந்த அந்த பெண் கைலாஷுக்கு போன் செய்து தன்னுடன் ட்ரிப்பில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் கைலாஷ் பயணம் செய்ய முடியாது என்று கூறி டெல்லிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை டெல்லியை அடைந்து மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். பின்னர் அவர் கைலாஷுக்கு போன் செய்தார், அவர் தனது நண்பர் வாசிமுடன் ஹோட்டலுக்கு வந்தார். அன்று இரவு அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மறுநாள் காலை, அந்தப் பெண் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். வழிகாட்டுதல்களின்படி, இந்த சம்பவம் குறித்து பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர், மேலும் அவர்கள் இங்கிலாந்து நாட்டவருக்கும் உதவி செய்து வருகின்றனர்.
கைலாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் போலீசாரிடம், கைலாஷ் ஆங்கிலம் பேச சிரமப்பட்டதாகவும், தன்னுடன் தொடர்பு கொள்ள கூகிள் மொழிபெயர்ப்பை அவர் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.