கேரளாவில் பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையை கொடூரமாக கொன்ற குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அருகே கடவந்தரா என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பனம்பள்ளி வித்யா நகரில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையில் கேட்பாரற்று ஒரு பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது. பார்ப்பதற்கு யாரோ தவற விட்ட பொருளுடன் கிடப்பதாக நினைத்து அந்த தொழிலாளர்கள் கவரை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதனுள் தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக எர்ணாகுளம் தெற்கு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான எர்ணாகுளம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தான் அந்த பிளாஸ்டிக் கவர் வீசப்பட்டதை உறுதி செய்தனர். உடனே அங்கிருந்த அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு வீட்டின் கழிவறையில் மட்டும் ரத்தக்கறை இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த வீட்டில் இருப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த வீட்டில் திருமணமாகாத 20 வயது இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்த பெற்றோர், குழந்தை பிறக்கும் வரை காத்திருந்துள்ளனர். நேற்று வீட்டில் வைத்து அப்பெண் குழந்தையை பெற்றுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த குழந்தையை கூரியர் கவரில் சுற்றி அப்பெண்ணின் தாய் மற்றும் தந்தை 5வது மாடியில் இருந்து வீசி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தாய், தந்தை, இளம்பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கூரியர் கவரில் இருந்த பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் சம்பந்தப்பட்ட இளம்பெண் முகவரி காட்டியதும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களை எளிதாக காவல்துறை கண்டறிய உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.