தந்தையை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக வெட்டி பயன்படுத்தப்படாத பாழடைந்த கிணற்றில் வீசிய இளைஞர் சிக்கினார். கர்நாடகா மாநிலம் முத்தோல் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. டிசம்பர் 6ல் நடந்த சம்பவம் திங்கள்கிழமை (டிச.14) அம்பலமானது.
முத்தோல் டவுனைச் சேர்ந்தவர் பரசுராம் குலாலி. இவருக்கு வயது 54. இவருடைய மகன் வித்தல் குலாலி. இவர் தனது தந்தையை தூக்க மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்து பின்னர் அவரது தலையில் இரும்பு கம்பி கொண்டு தாக்கினார். பின்னர் அவர் உடலை 30 துண்டுகளாக வெட்டினார். அதனை ஒரு ப்ளாஸ்டிக் பையில் சுற்றி அதனை பாழடைந்த போர்வெல்லில் வீசினார்.
பரசுராமன் வீடு திரும்பாததால் அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் போலீஸார் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் வித்தல் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இது தொடர்பாக அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்:
இது குறித்து பாகல்கோட் எஸ்.பி. ஜெயபிரகாஷ் கூறுகையில், என் தந்தைக்கு நான் 5வது மகன். என் தந்தை ஒரு குடி நோயாளி. அவர் எப்போதும் குடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் துன்பப்படுத்துவார். என் அம்மாவை அன்றாடம் அடிப்பார். அவரால் குடும்பம் முழுவதுமே துன்பத்தில் இருந்தோம். அதனாலேயே அவரை நான் கொலை செய்தேன். உடலை அப்படியே போர்வெல்லுக்குள் போட நினைத்தேன். ஆனால் உடலை உள்ளே செலுத்த முடியவில்லை. அதனால் துண்டு துண்டாக வெட்டி உள்ளே போட்டேன். என் தந்தையை கொலை செய்ததில் எனக்கு எந்த வருத்தமில்லை. இனிமேலாவது எல்லோருமே நிம்மதியாக இருப்பார்கள் என்று கூறினார் என்றார்.
ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு
ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், நடுங்கவைக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், 28 வயதான ஆப்தாப் அமின் பூனாவாலா, தனது துணையான ஷ்ரத்தாவை தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள தனது இல்லத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றபிறகு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்ட 10 மணி நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு இடையில் பிரேக் எடுத்து பீர் குடித்தார் என்றும், சிகரெட் புகைத்தார் என்றும், நெட்ஃபிளிக்ஸில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தார் என்றும், மேலும் Zomatoவில் உணவை ஆர்டர் செய்து உண்டார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஷ்ரத்தா கொலை அதிர்ச்சியே அடங்காத நிலையில், டெல்லியில் அதேபோன்று மற்றொரு கொடூர சம்பவம் ஒன்று, தற்போது நிகழ்ந்துள்ளது. இதில், தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர். அதில், அந்த பெண் தனது கணவரை மகனின் கையால் கொலைசெய்ய வைத்து, அதை மறைக்க உதவி செய்துள்ளார். கணவரின் உடலை பல்வேறு துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்து மறைத்துள்ளனர்.
இப்போது மூன்றாவதாக கர்நாடகாவில் ஒரு சம்பவம் அம்பலமாகியுள்ளது.