சென்னை அருகே 9 வயது சிறுமி 75 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெற்றோரை இழந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அருகிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த அச்சிறுமியை கடந்த ஜூலை 24 ஆம் தேதி செங்கல் சூளை பின்புறம் உள்ள திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது பாம்பு கடித்துள்ளது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் நிலையில் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் அச்சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அறிந்த உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்ககோரி புகாரளித்தனர். இந்த புகாரானது அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (எ) சின்னதுரை, பாஸ்கர், சதீஷ், ரமேஷ், விஜயகுமார் ஆகிய 5 பேரும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்ற 75 வயது முதியவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லைகள் செய்து வந்ததும், அந்த இழி செயலை இளைஞர்கள் 5 பேரும் செல்ஃபோனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முதியவர் உட்பட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்