கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 83 வயதான இவர், அப்பகுதியில் உள்ள ஸ்ரீவத்ஸா ரெசிடென்சி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 7 ம் தேதியன்று அடையாளம் தெரியாத ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து, வாட்ஸ் ஆப் செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. அதில் அவரது வீட்டிற்கான மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும், அதனால் வீட்டின் மின் இணைப்பு இரவிற்குள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் லிங்க் ஒன்றும் அனுப்பப்பட்டு இருந்துள்ளது. அதில் சில விபரங்களை கொடுத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.


இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் நடராஜன் பதற்றம் அடைந்துள்ளார். அப்போது அந்த வாட்ஸ் ஆப் எண்ணில் கூறிய வழிகாட்டுதல்படி, லிங்கை திறந்துள்ளார். அதில் தனது வங்கிக் கணக்கு விபரங்களை பதிவிட்ட நடராஜன், சோதனையாக 10 ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் நடராஜன் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்த போது, 3 இந்தியன் வங்கி கணக்குகளில் இருந்து 8 இலட்சத்து 7 ஆயிரத்து 600 ரூபாய் பணம் முறைகேடாக எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மின் கட்டணம் செலுத்தவில்லை என போலியாக லிங்கை அனுப்பி, வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு இருப்பது நடராஜனுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக நடராஜன் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேபோல கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 36 வயதான இவர், டிவொர்ஸ்மெட்ரிமோனியில் தனது விபரங்களை பதிவு செய்திருந்தார். இதனைப் பார்த்து மர்சியஸ் சிங் என்பவர் தொடர்பு கொண்டு, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி ராஜேஸ்வரி அந்த நபருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.


இந்நிலையில் மர்சியஸ் சிங் தனது தாயின் மருத்துவ செலவிற்காக 10 இலட்ச ரூபாய் அவசரமாக தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி தனியார் வங்கியில் 10 இலட்ச ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அந்நபர் மருத்துவ செலவிற்காக மேலும் 9 இலட்ச ரூபாய் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.


இதையடுத்து தனது 25 சவரண் தங்க நகைகளை அடகு கடையில் வைத்து 9 இலட்ச ரூபாய் பணத்தையும் ராஜேஸ்வரி அனுப்பியுள்ளார். பின்னர் இது குறித்து விசாரித்த போது மர்சியஸ் சிங் தன்னை ஏமாற்றி பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஸ்வரி கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.