சேலத்தில் தொழிலதிபரிடம் முத்திரைத்தாள் தருவதாக 8 லட்சம் பறித்த இடைத்தரகர் கைது. பெண் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று கோடி கடன் தேவைப்பட்டதால் இதற்காக முத்திரைத்தாள் வாங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை வேல் என்ற இடைத்தரகரிடம் முத்திரைத் தாள் வேண்டும் என கூறியுள்ளார். 


அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவூலத் துறையில் கார்த்திகா என்பவர் பணியாற்றி வருகிறார். அவருடன் மனோஜ் குமார் என்பவர் சேர்ந்து முத்திரை தாள் விற்பனை நிலையம் அமைத்து நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து முத்திரைத்தாள் வாங்கி கொள்ளலாம் என மணிகண்டனிடம் குழந்தைவேல் தெரிவித்துள்ளார். பின்னர் குழந்தை வேல் , கார்த்திகா மற்றும் மனோஜ் குமாரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து முத்திரைத்தாள் வாங்க சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள உணவகத்திற்கு மணிகண்டன் வந்துள்ளார்.



அப்போது 8 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு அதற்கான முத்திரைத்தாள் பெற்றுக்கொள்ளுமாறு அங்கிருந்த கார்த்திகா மற்றும் மனோஜ் குமார் தெரிவித்துள்ளனர். இதனை உண்மை என நம்பி மணிகண்டன் 8 லட்சத்தை கொடுத்துவிட்டு முத்திரைத்தாள் கேட்டுள்ளார். அப்போது பத்து நிமிடம் காத்திருங்கள் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் இருவரும் வராததால் மணிகண்டன் செல்போன் மூலமாக கார்த்திகாவை தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்காததால் ஏமாற்றமடைந்த மணிகண்டன் சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதை அடுத்து காவல்துறையினர் கார்த்திகா தரப்பினர் பயன்படுத்தி செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கார்த்திகா என்ற பெயரில் சேலம் கருவூல அலுவலகத்தில் யாரும் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் அங்கு வேலை செய்வதாக இடைத்தரகர் குழந்தைவேலு, மணிகண்டனை ஏமாற்றியுள்ளார். மேலும் இந்த மோசடியில் கார்த்திகா, குழந்தை வேலு, மனோஜ் குமார், முத்து மற்றும் இரண்டு நபர்கள் என மொத்தமாக 6 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த 6 பேர் மீது சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இடைத்தரகர் குழந்தைவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரசு அலுவலர் என்று கூறி 8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய சம்பளம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.