கோட்டக்குப்பம் அருகே கல்லூரி மாணவியிடம் நகையை பறித்துச் சென்ற வாலிபர்
வானூர் அருகே எறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (19). இவர் புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தன்னுடன் படிக்கும் புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த திவ்யா (19) என்பவருடன் ஒரு காரில் கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் சென்றார். அங்குள்ள கடற்கரை அருகில் இருவரும் காரில் இருந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், விக்னேஷிடம் சென்று உன்னை போலீஸ் உதவி ஆய்வாளர் அழைத்து வரச்சொன்னார் என்று கூறி அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பெரிய முதலியார்சாவடியில் உள்ள ஒரு தங்கும் விடுதி முன்பு கீழே இறக்கி விட்டார். பின்னர் அந்த வாலிபர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பொம்மையார்பாளையம் வந்து அங்கிருந்த திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே திவ்யா, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார்.
பறிபோன நகையின் மதிப்பு ஒரு லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
விவசாயி வீட்டில் 7.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
இதே போன்று விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேட்டை சேர்ந்தவர் கோதண்டபாணி (59), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. தற்போது அந்த நிலத்தில் கோதண்டபாணி, மணிலா பயிர் செய்துள்ளார். காட்டுப்பன்றிகளிடம் இருந்து மணிலா பயிரை காப்பாற்ற கடந்த சில நாட்களாக கோதண்டபாணி, இரவு நேரத்தில் தனது நிலத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கோதண்டபாணியும், அவரது மனைவி ரேணுகாவும் வீட்டை பூட்டிவிட்டு நிலத்திற்கு சென்று விட்டனர். பின்னர் காலை 6 மணியளவில் இருவரும், வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலிஸ் மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. இந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி பேரங்கியூர் மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு 7.5 லட்சம் என காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.