அமெரிக்காவில் ஏழு வயது சிறுவன் வியாழன் அன்று காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சலவை இயந்திரத்தில் அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.


டெக்சாஸைச் சேர்ந்த ட்ராய் கோலர் என அடையாளம் காணப்பட்ட சிறுவன் காலை 6:30 மணியளவில் (உள்ளூர் நேரம்) காணவில்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், அவர் 2 முதல் 3 மணிநேரமாக காணவில்லை எனக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் அவரது தந்தை வீட்டில் இருந்திருக்கிறார். அதே சமயத்தில், அவரது தாயார் மருத்துவமனையில் இரவு ஷிப்டிலிருந்து வீடு திரும்பி இருக்கிறார். 


சிறுவனின் வீட்டிற்கு, போலீஸ் சென்ற போது மருத்துவமனை சீருடையில்தான் தாயார் இருந்திருக்கிறார். 2019இல், அச்சிறுவன் தத்தெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இன்னும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


டெக்சாஸில் உள்ள அவரது வீட்டின் கேரேஜில் வைக்கப்பட்ட சலவை இயந்திரத்தில் ஏழு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்தோ அல்லது யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்பது குறித்தோ அலுவலர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.


"என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறோம். அவர் வாஷிங் மெஷினால் கொல்லப்பட்டாரா அல்லது கொல்லப்பட்டு அதில் வைக்கப்பட்டாரா, என்பது குறித்து தெரியவில்லை.


நாங்கள் விசாரணையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இதை கண்டுபிடிக்க நேரமாகும். என்னால் கருத்து தெரிவிக்க முடியாது" என்று ஹாரிஸ் கவுண்டி விசாரணை அலுவலரான லெப்டினன்ட் ராபர்ட் மிஞ்சேவ் கூறியுள்ளார்.


மேலும், சிறுவனைக் கண்டுபிடிக்கும் போது முழு உடையில் இருந்ததாக மிஞ்சேவ் தெரிவித்தார். "குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது. தயவுசெய்து அந்தப் பகுதியைத் தவிர்க்கவும். குடும்பத்திற்காக அனைவரின் பிரார்த்தனை செய்யும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்த வழக்கில் விசாரணைக்காக பெற்றோர்கள் போலீஸ் ரோந்து கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். ட்ராய் தனது பெற்றோருடன் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக மின்சேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் 2019 இல் தத்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு வளர்ப்புப் பிள்ளையாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண