கண்ணாடி ஜார்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக் கரையில் தான் இந்த ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நதிக்கரையில் சிலர் துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில கண்ணாடி ஜாடிகளைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோதுதான் அந்த கண்ணாடி ஜாடிகளில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு புகார் கொடுத்தனர்.


சம்பவ இடத்திற்கு போலீஸாரும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் வந்தனர். அங்குவந்த அவர்கள் அந்த ஜார்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


சில சிசுக்கள் 5 மாதங்கள் நிரம்பியவை, சில 7 மாதங்கள் நிரம்பியவையாக இருந்தன. இது குறித்து முடலாகி டவுன் முனிசிபல் கவுன்சில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துணை ஆணையரின் கீழ் போலீஸ் விசாரணைப் படை அமைத்துள்ளது. சிசுக்களின் பாலின சோதனையும் நடைபெறவுள்ளது. அந்தப் பகுதியில் 6 மகப்பேறு மருத்துவமனை இருப்பதாகவும், பல ஸ்கேனிங் மையங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.




இது தொடர்பாக எம்எல்ஏ பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், பெலகாவியில் கண்ணாடி ஜாடிகளில் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போலீஸார் இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். சுகாதாரத் துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கருக்கலைப்புகள் குறித்த ஆவணங்களையு சோதனை செய்யச் சொல்லியுள்ளோம். சுகாதாரத் துறை இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் உறுதி செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரிய இணை இயக்குநர் ஏ எம் பசவாரஜா கூறுகையில் சுகாதாரத் துறையானது பெண் சிசுக்கள் கருக்கலைப்புக்கு எதிராக விரிவான பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறினார். மாநில அரசின் பாக்கியலட்சுமி திட்டமும், மத்திய அரசின் பேட்டி பச்சாவ், பேட்டி படாவ் திட்டங்களும் பெண் சிசு பாதுகாப்பையே உறுதி செய்கின்றன என்றார்.


அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். 50 ஆண்டுகளாக அங்கு அமலில் இருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின் மூலம் இனி கருக்கலைப்பு குறித்து உத்தரவுகளை அமெரிக்காவின் மாகாணங்களே முடிவு செய்யலாம். 


உலகின் ஒருபுறம் இப்படி நடக்க மறுப்புறம் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.