உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுத்தையை கொலை செய்ததாக 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பெண்களும் அடங்குவர். 


உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் உள்ளது கட்டார்னியாகட் என்ற வனவிலங்குகள் சரணாலயம். இந்த சரணாலயத்தை சுற்றியும் அதனுள்ளேயும் கூட சில கிராமங்கள் உள்ளன. இதில் குறிப்பாக கதோடியா என்ற கிராமத்தில் புகுந்த சிறுத்தை 13 பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் 3 பேர் பெண்கள். காயமடைந்தவர்களில் சில வன அலுவலர்களும் உண்டு. மற்றபடி கிராமவாசிகள் அனைவருமே வயலில் வேலை செய்யும்போதோ அல்லது கால்நடை மேய்க்கச் செல்லும்போதோ தாக்குதலுக்க்கு உள்ளாகி உள்ளனர். 


இந்நிலையில் கடந்த 27ஆம் தேதியன்று 3 வயதான அந்த பெண் சிறுத்தை கிராமத்திற்குள் வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தையை சுற்றி வளைத்த கிராம மக்கள் அதை அடித்தே கொலை செய்துள்ளனர்.




இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வன அலுவலர் அகாஷ்தீப் பதாவன் கூறுகையில், 3 வயது பெண் சிறுத்தையை அடித்துக் கொன்றதாக 10 பெண்கள் உள்பட 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், கிரிமினல் சட்டத் திருத்தம் 7ன் கீழ் குழப்பத்தை விளைவித்தல், அரசு ஊழியர்களை தாக்குதல், அரசு நடவடிக்கைகளை முடக்குதல் உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிறுத்தையைப் பிடிக்க ஆங்காங்கே வலைகள் விரிக்கப்பட்டிருந்த நிலையில் அது எதிர்பாராத பாதை வழியாக கிராமத்துக்குள் வந்துள்ளது. புதன் கிழமை அதிகாலை கிராமத்துக்குள் சிறுத்தை வர அதனை கிராமவாசிகள் அடித்துக் கொன்றுள்ளனர்.


விலங்கு மனித மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன அழிப்பே இதற்கு முக்கியக் காரணம் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


மக்களோ ஆண்டாண்டு காலமாக தாங்கள் வசிக்கும் நிலத்தை விட்டுவிட்டு எப்படி வெளியேற முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.


வடக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள கானகங்களை ஒட்டிய கிராமங்களில் இவ்வாறான மனித விலங்கு மோதல் அதிகமாகவே இருக்கின்றன. கடந்த 202ஒல் கூட வடக்கே ஒரு சிறுத்தையைக் கொன்று ஊர் மக்கள் அனைவருமே அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்றது அனைவரையும் பதற வைத்தது. 


இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இணைந்து மூன்று வயது சிறுத்தையை கல்லாலும் கம்பாலும் அடித்தே கொலை செய்துள்ளனர்.