அதிமுக தலைமைக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது. தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகும் நிர்வாகிகளை கூட்டணி கட்சியான அதிமுக தன் கட்சியில் சேர்ந்து கொண்டது அந்தக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதேபோல, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா போன்றவர்கள் பாஜகவில் இணைந்தனர். இதற்கிடையே, பாஜக மாநில தகவல்தொழில் நுட்ப பிரிவின் தலைவர் உள்ளிட்ட சிலர் அதிமுகவில் இணைந்த விவகாரம் அதிமுக - பாஜக கூட்டணிக்கிடையே உச்சக்கட்ட பிரச்சினையை உண்டாக்கியது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கிடையே மோதல் நடந்து வந்தபோது, இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில் இருவரையும் சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும். “ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது’’ என்று அண்ணாமலை பேசியது ஈபிஎஸ் தரப்பை கோபத்தில் ஆழ்த்தியது.
அதிமுக தலைமைக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல்:
குறிப்பாக, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், ஈபிஎஸ் பக்கம் சென்ற பிறகும், சட்ட போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்த பிறகும் அண்ணாமலை அப்படி பேசியது, இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது. அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாகவே பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டார் ஈபிஎஸ்.
இதெல்லாமும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. ஒரு காலத்தில் பாஜகவை பற்றி பேச மறுத்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் தற்போது அண்ணாமலையை நேரடியாகத் தாக்கிப் பேச ஆரம்பித்தனர்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரம் மாதம், டெல்லிக்கு சென்ற ஈபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகளுக்கிடையே நிலவி வந்த பதற்றமான சூழல் தணிந்தது. பின்னர், அடுத்தாண்டு மக்களவை தேர்தலிலும், பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் என ஈபிஎஸ் அறிவித்தது இரு கட்சிகளுக்கு இடையே வெடித்த பிரச்னைகளுக்கு தற்காலிக தீர்வாக அமைந்தது.
அண்ணாமலை கருத்தால் அதிமுகவின் அதிர்ச்சி:
இந்நிலையில், கூட்டணிக்கிடையே புதிய மோதல் வெடித்துள்ளது. ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மறைந்த முதலமைச்சர் என அண்ணாமலை பேசியிருப்பது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஊழலை பொறுத்தவரையில், கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்பு கொள்வீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை இப்படி பதில் அளித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பதில், அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு சென்ற நிலையில், ஜெயலலிதாவை அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.