திருவண்ணாமலை அருகே டிராக்டர் விபத்தை சந்தித்த நிலையில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியில் முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். திருமணத்துக்காக ஆந்திர பதிவெண் கொண்ட காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் எய்யில் கூட்டுச்சாலை அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சக்திவேல், வசந்த குமார் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் விபத்து
இதேபோல் சென்னை மதுரவாயல் அருகே சாலை ஓரம் கார் ஒன்று பழுதாகி நின்றது. இதன் பின்புறத்தில் லாரி மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். காரை பழுது நீக்கி கொண்டிருந்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்த மெக்கானிக் ரவி என்பவர் படுகாயங்களுடன் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்குமாரை கைது செய்தனர்.
மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள 100 அடி சாலையில் இன்று காலை ஷேர் ஆட்டோவும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் பைக்கில் சென்ற அஜித் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமாரை கைது செய்தனர்.