மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வழுவூர் நெய்குப்பையை சேர்ந்த விவசாயி நேரு. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நில விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் தனது டிராக்டரை வீட்டின் அருகே கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்துள்ளார்.




மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்த போது தனது வீட்டில் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து. தனது வயல் மற்றும் அக்கம் பக்கம் என கிராம முழுவதும் தேடியுள்ளார். பின்னர் தனது டிராக்டர் காணாமல் போனதை உணர்ந்த விவசாயி நேரு,  காணாமல் போன தனது டிராக்டர் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட பெரம்பூர் காவல்துறையினர் டிராக்டர் காணமால் போனது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 




மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில்  உதவி ஆய்வாளர் இளையராஜா  தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு டிராக்டர் திருட்டு குறித்து விசாரணையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவகளை கொண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 



அப்போது வழுவூர் நெய்குப்பை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த டிராக்டரை எடுத்து செல்வதற்காக அதற்கான டீசல் வாங்க இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களின் சிசிடிவி பதிவுகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் டிராக்டரை திருடியது கூட்டாளிகளான சிபூலியூரை சேர்ந்த 21 வயதான அரவிந்தன், 25 வயதான  விவேகானந்தன், 17 வயதான நதீஷ், 22 வயதான மதன் மற்றும் உத்திரங்குடியை சேர்ந்த 29 வயதான சக்திவேல், புரசங்காடு பகுதியை சேர்ந்த 18 வயதான அரவிந்த் ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது.  இதனை அடுத்து அந்த 6  பேரை கைது செய்த  தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை இரவோடு இரவாக திருடி சென்ற சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையை பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.


Good Friday 2022: புனித வெள்ளி வரலாறும் சிறப்புகளும்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!