சென்னையில் பாலியல் உறவுக்கு மறுத்த யாசகம் கேட்கும் பெண்ணை தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சென்னை முகப்பேர் பகுதியில் நேற்று காலை பெண் ஒருவர் இரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜே.ஜே. நகர் போலீசார் அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

இதில் உயிரிழந்த பெண் அதே பகுதியில் தினமும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. அதேபோல் அவர் யாசகம் பெற்றும் தனது வாழ்க்கையை ஓட்டியுள்ளார். வீடு எதுவும் இல்லாததால் தினமும் பிளாட்பார்மில் தூங்கி வந்துள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட சிறிது தூரத்தில் ஒரு ஆண் மயங்கி கிடப்பதை போலீசார் கண்டனர். அதனால் இந்த பெண்ணின் மரணத்திற்கும், அந்த நபருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசார்ணை நடைபெற்றது. 

Continues below advertisement

அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் என்பது தெரிய வந்தது. முகப்பேர் கிழக்கில் உள்ள சர்ச் சாலைப் பகுதியில் தங்கியிருக்கும் அவர் பிளம்பிங் உள்ளிட்ட கிடைக்கும் பணிகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான ஷேக், கடந்த சில நாட்களாகவே இறந்து போன பெண் தனியாக பிளாட்பார்மில் படுத்து தூங்குவதைப் பார்த்துள்ளார். 

இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் அப்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த ஷேக் ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்து சத்தம் போட்டுள்ளார். எங்கு தான் மாட்டிக்கொண்டால் அவமானமாக போய் விடுமோ என பயந்த ஷேக் அங்கிருந்த கல்லை எடுத்து அப்பெண்ணின் தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ஆனால் இது தெரியாமல் அங்கிருந்த சென்ற ஷேக் சிறிது தூரத்தில் போதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஷேக்கை கைது செய்த போலீசார் அவர் மீது பாலியல் அத்துமீறல், பெண் மீது தாக்குதல், கொலை செய்தல் என பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.