Bihar: பிகாரில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தண்டணையாக 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என தீர்ப்பு கொடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றங்கள் பல்வேறு தண்டைகளை வழங்கி வரும் நிலையில், பிகார் மாநிலத்தில் நடந்துள்ள உள்ளூர் பஞ்சாயத்து கூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தண்டணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பஞ்சாயத்து சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க குற்றவாளி, 5 வயது குழந்தைக்கு இனிப்பு தருவதாக கூறி அழைத்துச் சென்று, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் குழந்தை தனது பொற்றோரிடம் தனக்கு நடந்ததைச் சொல்லி அழுதுள்ளது. இதனால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், தங்களது கிராமத்தில் உள்ள முக்கிய நபரைச் சந்தித்து தங்களது குழந்தைக்கு நடந்த துயரச் சம்பவத்தை பற்றி கூறியுள்ளனர். அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. அப்படி கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தைக் ஒப்புக்கொள்ளவே, பஞ்சாயத்தில் குற்றவாளிக்கு தோப்புக்கரணம் தண்டனையாக கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியும் தோப்புக்கரணம் போட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பகிரவே, காட்டுத்தீ போல், அந்த வீடியோ வைரலானது. வீடியோ வைரலானதும், பிகார் மாநில காவல் துறையினர் கிராமத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பாலியல் வன்கொடுமையும், பஞ்சாயத்துக்கு கூட்டமும் நடைபெற்றுள்ளதை உறுதி செய்துள்ளனர். அதன் பின்னர் காவல் துறையினர் குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் மூலம் வழக்குன் பதிவு செய்துள்ளனர். வீடியோ வைரலானதும் பாலியல் குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். இதனால் குற்றவாளியை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் எனவும் பலர் கூறிவருகின்றனர். பாலியல் குற்றவாளி அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இந்த குற்றச் சம்பவத்தை சட்டப்படி கையாளாமல், உள்ளூர் பஞ்சாயத்தில் குற்றவாளிக்கு தோப்புகரணம் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறிவருகின்றனர்.