கும்பகோணம் அருகே இருவேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த கேட் அருகே குடமுருட்டி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு நேற்று மாலை 3.30 மணியளவில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 40 வயதுமிக்க பெண் ஒருவர் தனது 2 மகளை கட்டி அணைத்தபடி ரயில் முன் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 


இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மகள்களுடன் தற்கொலை செய்துக் கொண்ட பெண் கும்பகோணம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஆர்த்தி என்பதும்,  அவருடைய மகள்கள் ஆருத்ரா, சுபத்ரா இருவரும் என்பதும் தெரிய வந்தது. 


ராஜேஷ் கோவையில் உள்ள கட்டுமானம் தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். மகள்கள் இருவரும் முறையே 6 மற்றும் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தோழியின் வளைகாப்பு விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது மகள்களுடன் சென்ற ஆர்த்தி உத்தாணி கிராமத்திற்கு சென்று ரயில்வே கேட் அருகே ரயிலில் விழுந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மற்றொரு சம்பவம் 


இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ரேவதி மற்றும் அவரது மகள் மகேஸ்வரி என்பவரும் தான் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மகேஸ்வரி 30 வயதான நிலையில் திருமணம் நடைபெறாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த இருவரும் திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகே மயிலாடுதுறையில் இருந்து வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கும்பகோணம் பகுதியில் ஒரே நாளில் இரு வேறு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




தற்கொலை தீர்வாகாது:


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050