கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தற்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அந்தப்பகுதி பொதுமக்கள் நகைக்கடன் பெற்றுள்ளனர். அவர்களில் பலருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுப்பேட்டை, கண்ணமங்கலம், அழகுசேனை பகுதிகளை சேர்ந்த சுதா, தனலட்சுமி, அமுதா, கதிரேசன், பவித்ரா, சசிகலா என ஆகியோர் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றனர். அப்போது அங்கு வங்கி செயலாளர் குருநாதனிடம் நாங்கள் 5 சவரன் தங்கை தான் அடகு வைத்து கடன் பெற்றுள்ளோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை என கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு இது அரசு எடுத்த முடிவு. வேறு மாவட்டத்தில் இருந்து கூட்டுறவு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து முடிவு செய்தது. நாங்கள் ஏதும் செய்ய முடியாது எனக்கூறி அனுப்பினார். 


 




 


 


அப்போது அங்கு இருந்து மனவேதனையுடன் வெளியே வந்த சசிகலா என்பவர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். உடனே இதனை அறிந்த வங்கி செயலாளர் குருநாதன், கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் ஆய்வாளர் சாலமோன் ராஜா மற்றும் காவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று தீக்குளிக்க முயன்ற பெண் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். மேலும் தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் சமரசம் செய்து பெண்ணை அனுப்பி வைத்தனர். அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது. சங்க செயலாளராக குணசேகரன், தலைவராக ரகோத்தமன் மற்றும் துணைத்தலைவர், இயக்குனர்கள் உள்ளனர்.


 


 




தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை 5 பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்தது. இங்கு பொது நகை கடனாக மேற்கண்ட தேதி வரை மொத்தம் 2,389 பேர் பெற்றுள்ளனர்.இதில் தகுதியுள்ள பயனாளிகள் என 333 பேருக்கு தள்ளுபடி செய்திருப்பதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிவிப்பு பலகையில் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. இதில் நிலமற்ற உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பயிர்கடன் தள்ளுபடி வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 5 சவரனுக்கும் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வராததாலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.