மன்னார்குடி அருகே துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி நீதிமன்றம் தீர்ப்பு..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அசேஷத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவே இருப்பதை பல நாட்களாக நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி மதிய உணவு நேரத்தில் திடீரென துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தரையில் சுட்டும், வங்கி மேலாளர் கோவிந்தராஜனை துப்பாக்கி முனையில் மிரட்டியும் 5.58 லட்சம் ரொக்கம் மற்றும் லாக்கரில் இருந்த 2.51 லட்சம் மதிப்புள்ள 84 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் போலீசார் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் உத்தரவின் பேரில் 4 தனிப்டைகள் அமைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை புலனாய்வு செய்து தேடினர். தொடர் புலனாய்வில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை முதலில் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம் (35), முத்துக்குமார் (31), மீரான்மைதீன் (32), சுடலைமணி (31), திருவாடானையை சேர்ந்த ராஜா (35), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த அயூப்கான் (29), மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல் மணி என்கிற மணிகண்டன் (25) ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரனை முடிவடைந்து நேற்று இரவு சார்பு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமாவதி தீர்ப்பளித்தார். இதில் மரியசெல்வம், மீரான் மைதீன், சுடலைமணி, ராஜா, அயூப்கான் ஆகிய 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து திர்பளித்தார். மேலும் முத்துக்குமாருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கூல்மணி என்கிற மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆர்.எஸ்.ஜெய்சங்கர் ஆஜராகி வாதாடினார்.
தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகளில் மணிகண்டன் தவிர 6 பேர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூல்மணி என்கிற மணிகண்டன் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மன்னார்குடியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மூன்றாண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.