பிரதான் மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு ரூ. 2 என்ற வீதம் மாதம்தோறும் 55 ஆயிரம் வரை பிரீமியம் செலுத்தி ஆண்டிற்கு ரூ 36,000 வரை பென்ஷன் பெற முடியும்
கொரோனா தொற்று நமக்கு பல பாடங்களை வாழ்க்கையில் கற்றுக்கொடுத்து விட்டது. குறிப்பாக சேமிப்புப் பழக்கத்தினை மக்களிடம் அதிகரிக்கச்செய்தது என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக வயதானக் காலத்தில் யாரையும் நம்பியும், சார்ந்தும் வாழக்கூடாது என்பதற்காக ஓய்வுதியத்தினைப் பெறுவதற்கான வழிமுறைகளை மக்கள் தேடத்தொடங்கிவிட்டனர். அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் ஏதாவது பென்சன் திட்டம் உள்ளதா? என்று அதில் சேருவதற்கு மக்களிடம் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் அமைப்பு சாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜானா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறைவான முதலீட்டாக தினமும் ரூ. 2 செலுத்தி 60 வயதிற்குப்பிறகு ஆண்டுத்தோறும் ரூ.36 ஆயிரம் பெறும் வகையில் அமைந்துள்ளது.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜானா திட்டத்தினைப் பெறுவதற்கான தகுதிகள் என்ன?
ஓய்வூதியம் பெற முடியாதவர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தத்திட்டத்தில் சேரலாம். ஆனால் இவர்களின் மாத வருமானம் ரூ. 15 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் மற்றும் பி.எப் (EPFO) தேசிய பென்சன் திட்டத்தின் (NPS) கீழ் இருக்கக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. மேலும் இத்திட்டத்தில் சேர நினைப்பவர்கள் எந்தவொரு சேவை மையத்திற்கு சென்று PM-SYM கணக்கினை திறந்துக்கொள்ளலாம். இதோடு விண்ணப்பிக்கும் போது, உங்களிடம் ஆதார் அட்டை மற்றும் வங்கி பாஸ் புக் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனாவில் கணக்கு திறக்கப்பட்ட பிறகு, விண்ணப்பதாரருக்கு ஷ்ராம் யோகி அட்டையும் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கு தொடங்கியவர்கள் வயதிற்கு ஏற்ப பிரீமியம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு 18 வயதில் ஒருவர் இணைந்திருந்தால், ஒரு நாளைக்கு ரூ. 2-க்கும் குறைவாக என்ற வீதம் மாதத்திற்கு ரூ.55 டெபாசிட் செய்ய வேண்டும். அதே போல் 25 வயதுடையவர்கள் மாதம் ரூ.80ம், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் ரூ. 200 ம் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். குறிப்பாக இத்திட்டத்தில் 60 வயதிற்குள் டெபாசிட் செய்ய வேண்டும். 18 வயதில் இருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கும் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் 42 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது வரை பிரதமர் ஸ்ராம் யோகி மந்தன் யோஜனாவில் ரூ .27,720 மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு 60 வயதுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
PM-SYM விண்ணப்பிக்கும் முறை:
PM-SYM னை எளிமையாக நாம் வீட்டில் இருந்தே விண்ணப்பித்து விடலாம். என்னென்ன படிநிலைகள் என இங்கு சற்று தெரிந்துக்கொள்வோம்.
முதலில், பிரதான் மந்திரி ஷ்ரம் மந்தன் யோஜனா திட்டத்தின் இணையதளமான maandhan.in/shramyogi என்பதனை ஓபன் செய்ய வேண்டும்.
இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் Apply Now என்பதனை கிளிக் செய்யவும்.
அதில், இரண்டு ஆப்சன்கள் உள்ள நிலையில் Self Enrollment என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
அதனுள் உங்களின் மொபைல் எண்ணினை என்டர் செய்து உள்ளே நுழையவும்.
பின்னர் அந்தப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் ஐடி போன்றவற்றைக் குறிப்பிட்டு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
இதன் பின்னர் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
இறுதியில் இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றி படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து உங்களின் கணக்கு துவங்கப்பட்டுவிடும். இதற்குறிய ஆவணத்தினை நீங்கள் இந்தப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.