நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மைதீன்பிச்சை (55). இவரும் இவரது சகோதரரான அலியார் என்பவரும் சேர்ந்து வீரவநல்லூரில்  நகைக் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்  மைதீன்பிச்சை கடந்த 11 ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு, நகைப்பையுடன் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் மைதீன்பிச்சையை பின் தொடர்ந்து வீட்டு வாசலில் அவரை அரிவாளால் வெட்டி விட்டு நகைப் பையை பறித்துச் சென்றனர்.  உடனடியாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மைதீன்பிச்சையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் 5 கிலோ தங்க நகைகளை பறித்து சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




மேலும் ஏ.எஸ்.பி மாரிராஜன் தலைமையிலான 6 தனிப்படை போலீஸ் குழுவினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் அதிகளவில் செல்போன் பேசியதை வைத்து, அந்த நபர் பற்றி போலீசார் விசாரித்த போது அது வீரவநல்லூரை அடுத்த பாறையடி காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் சுதாகர் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது மாணவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.




கல்லூரி மாணவர் சுதாகர், அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட ஐயப்பன், மருதுபாண்டி மற்றும்  கூட்டாளிகள் அழகுசுந்தரம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கொள்ளையடித்த நகைகளை அவர்கள் அடிக்கும் டிரம்சில் மறைத்து வைத்தது காவல்துறைக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது.  தனிப்படை அமைத்து நகைகளை மீட்டும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.


இந்த சூழலில் கொள்ளையடித்து சென்ற நபர்கள் மறைத்து வைத்திருந்த டிரம்ஸ் மேளத்தில் இருந்து நகைகளை காவல்துறையினர் மீட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது சுமார் 3.100 கிலோ கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் விரைவில் அனைத்து நகைகளையும் மீட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, கல்லூரி மாணவர் உட்பட இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதோடு அதனை தாங்கள் அடிக்கும் டிரம்ஸ் செட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இக்கொள்ளை சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு நகைகளை மீட்ட காவல்துறையினர் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்,