ஆசிரியர் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைக்கு விஷம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


பூட்டிய வீட்டில் 5 பிணங்கள்:


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 44). தனது மகள் ஆனந்தவள்ளி 8 வயது சிறுமியாக இருந்தபோதே கணவரை இழந்த, பழனியம்மாள்,  சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் சிவகாசி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த லிங்கம் (வயது 44) என்பவரும் ஆசிரியராக பணியாற்றினார். இவர்கள் இருவர் இடையேயான பழக்கம், நாளடைவில் திருமணத்தில் சென்று முடிவடைந்தது. திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்த, அந்த தம்பதிக்கு ஆதித்யா (15) என்ற மகனும் இருந்தார்.


கடன் தொல்லை:


இதனிடையே, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு ராஜலிங்கம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  கணவன், மனைவி இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்,  மருத்துவ செலவுகளுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆனந்தவள்ளியும் சென்னையை சேர்ந்த ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனந்தவள்ளி கருவுற்ற நிலையில், பிரசவத்துக்காக திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். 3 மாதங்களுக்கு முன்னர் ஆனந்தவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுவன் ஆதித்யா சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தான்.


குடும்பத்துடன் தற்கொலை:


ஆசிரியர் லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தாலும், அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடனை திருப்பி செலுத்த முடியாமல் லிங்கம், பழனியம்மாள் தவித்தனர். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், 23-05-2024 அன்று பணத்தை திருப்பி கொடுப்பதாக கடன் வழங்கிய அனைவருக்கும் ஆசிரியர் தம்பதியினர் உறுதி அளித்துள்ளனர்.


ஆனால், ஆசிரிய தம்பதியின் வீட்டின் கதவு நேற்று காலை திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பகல் 11 மணி வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால்,  அப்பகுதியை சேர்ந்த மக்கள் சந்தேகம் அடைந்து கதவை தட்டி உள்ளனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததை உணர்ந்த மக்கள், திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


5 சடலங்கள் கண்டெடுப்பு:


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.  அங்கு தனித்தனி அறைகளில் ஆசிரியர் லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். மற்றொரு அறையில் ஆனந்தவள்ளி, அவரது குழந்தை சஷ்டிகா, சிறுவன் ஆதித்யா ஆகியோர் பிணமாக கிடந்துள்ளனர். அவர்களது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தம்பதி தூக்கிட்டு கொள்வதற்கு முன்னதாக, மற்ற மூவருக்கும் விஷம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.