சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளரை தாக்கி ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் பிடெக் மற்றும் பயோ டெக் படித்து விட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிற்கு எதிரே உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தனது நண்பரை சந்திக்க ரூ.20.22 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார்.
அண்ணாசாலை எஸ்பிஐ வங்கி அருகே சென்ற போது 2 பைக்கில் வந்த 6 பேர் சிவபாலனை வழிமறித்துள்ளனர். அவரை அரிவாளால் வெட்டியதோடு மட்டுமல்லாமல் ரூ.20.22 லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு சென்றதாக ரத்த காயங்களுடன் சிவபாலன் அண்ணாசாலையில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வந்தனர். இதில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் காயம் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் ரூ.20.22 லட்சம் பணமானது தான் தனியாக மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை தொடங்க முடிவு செய்து பெற்றோர் மற்றும் உறவினர்கலிடம் ரூ.20 லட்சம் பெற்று வந்ததாகவும், மீதமுள்ள 22 ஆயிரம் தான் வைத்திருந்ததாகவும் கூறிய நிலையில் சிவபாலனிடம் அதற்கான வரவு குறித்த ஆதாரமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிவபாலனிடம் துருவி துருவி விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது அந்த பணம் பாரிமுனையில் இருந்து ஒரு நபரிடம் வாங்கி வந்த ஹவாலா பணம் என தெரிய வந்தது.இதனைத் தெரிந்து கொண்ட நபர்கள் பின் தொடர்ந்து வந்து சிவபாலனை அரிவாளால் வெட்டி பணத்தை வழிப்பறி செய்து சென்றதும் உறுதியானது. இதனையடுத்து குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில் சிவபாலனிடம் பணத்தை பறித்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், கே.கே.நகரை சேர்ந்த ஷேக் இஸ்மாயில், பாக்கியராஜ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வரும் நிலைஅயில் வழிப்பறி செய்த ரூ.20.22 லட்சம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம் ஹவாலா பணத்தை தன்னுடைய பணம் என பொய் புகாரளித்த சிவபாலனையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்