சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் வில்லிவாக்கம் காவல் துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முகமது ரிஸ்வான் (23) என்பவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 80 கிலோ குட்கா, 3.23 லட்சம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.


குட்கா பதுக்கல் :


அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தமீமுல் அன்சாரி (24), சிவா (29) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு தரகர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் பெயரில் கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் உத்தரவின் பெயரில், வில்லிவாக்கம் சரக உதவி ஆணையர் ராகவேந்திர ரவி, மேற்பார்வையில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைத்து பெங்களூர் விரைந்தனர்.


அங்கு கதிரவன்(29) என்பவரை கைது செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் சென்னையில் உள்ள குடோனில் பாலு (54) என்ற நபர் கிலோ கணக்கில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் அளித்தார். இதனையடுத்து திருவல்லிக்கேணி சென்ற காவல் துறையினர் குடோனில் பதுங்கி இருந்த பாலுவை கைது செய்து அவர் வைத்திருந்த 320 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.


தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல் துறையினர் நீதிமன்றக் காவலுக்கு அனைவரையும் அனுப்பி வைத்தனர்.


முந்தைய சம்பவங்கள்


இதே போல் நவம்பர் 4ஆம் தேதி கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் காவல்துறையினருக்கு குட்கா பொருட்களை விற்பனைக்கு கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், நீலாம்பூர் லீமெரிடியன் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை சோதனை செய்து பார்த்த போது அதில் ½ டன் எடை கொண்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பேருந்திற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த செந்தில்குமார் (47), மெகப்பு பாஷா (30), செந்தில் ராஜா (44) மற்றும் ஜெயப்பிராகாஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரை டன் புகையிலைப் பொருட்கள் மற்றும் அதனை கடத்தி வர பயன்படுத்திய ஆம்னி சொகுசு பஸ் மற்றம் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை வாங்குவதற்கு வந்த டவேரா கார் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.




அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலின் பேரில் மயிலம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத் பட்டேல் (26), அமரராம் (22), கோபால் (22) ஆகியோர் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


பறிமுதல் : 


இதையடுத்து அனைவரையும் கைது செய்த காவல் துறையினர், சுமார் 1½ டன் எடை கொண்ட குட்கா பொருட்கள், 2 கார்கள், 2 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 20 இலட்சத்து ஆயிரத்து 800 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


ஒரே நாளில் இரண்டு வழக்குகளிளும் சேர்த்து மொத்தம் 2 டன் எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.