வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திமுக பிரமுகர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில் வேதாரண்யம் அருகே உள்ள குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த திமுக பிரமுகருமான லட்சுமணன், தேத்தாகுடி தெற்கு பகுதி சேர்ந்த ரவி மற்றும் வேதமணி, பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த குமார், மதுரையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் ஆகியோரை நாகை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் சுமோ கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கஞ்சா கோடியக்கரை, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, மணியின் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது என்பது தெரிய வருகிறது.
இதனுடைய இந்திய மதிப்பு சுமார் 60 லட்சம் என கூறப்படுகிறது. அன்னிய மதிப்பு சுமார் ஆறு கோடி இருக்கலாம் என தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திர போஸ் காவல் ஆய்வாளர்கள் மற்றும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேதாரண்யத்தில் உள்ள குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை சிறையில் அடைத்தனர். வேதாரண்யம் பகுதியில் கஞ்சா கடத்தல் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்