சென்னையில் 10 ஆயிரம் பேரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் 15 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்றும், அந்த வட்டிக்கான பணம் மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் எனவும் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனை நம்பிய பொதுமக்கள் பலரும் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். நாட்கள் சென்ற நிலையில் நிறுவனம் சொன்னபடி வட்டி தொகையை மக்களுக்கு கொடுக்கவில்லை. அதேபோல் அசல் தொகையையும் சுருட்டிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் 1500 பேர் முதற்கட்டமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிட்டதட்ட 10 ஆயிரம் பேரிடம் இந்த மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.
அதேபோல் மோசடி தொகையும் ரூ.800 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கிடையில் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்கள் அலெக்சாண்டர், சௌந்திரராஜன் உட்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகள் உட்பட 32 இடங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 19 குற்றவாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 3 முக்கிய பெண் குற்றவாளிகள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
திருவேற்காட்டை சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரை சேர்ந்த சுஜாதா என்ற 3 பேரும் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் 3 பேரும் 2,835 பேர்களிடம் ரூ.235 கோடி அளவுக்கு பணம் வசூல் செய்து கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.