பாலுணர்வை தூண்டும் வஸ்துக்களை உருவாக்கக் கடத்தப்பட்ட 295 நன்னீர் ஆமைகளை உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) ஞாயிற்றுக்கிழமை அன்று மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை லக்னவ் மாவட்டத்தில் உள்ள பந்தாரா பகுதியில் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் (WCCB) மற்றும் வனத் துறையின் கூட்டு நடவடிக்கையில் மீட்பு செய்யப்பட்டது. பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் நபரையும் STF கைது செய்தது.


இது குறித்து கோட்ட வன அலுவலர் (டிஎஃப்ஓ) ரவி சிங் கூறுகையில், “கடத்தல்காரர்களிடமிருந்து  மொத்தம் 295 நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தியதாக வாசிம் என்பவரை எஸ்டிஎஃப் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 






குற்றம் சாட்டப்பட்டவர்கள், விலங்குகளை உணவாகப் பயன்படுத்த அல்லது செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காக வழங்குவதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, ஆமைகளின் உடல் பாகங்கள் பாலுணர்வை ஏற்படுத்தும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.


லக்னவ் மாவட்டத்தின் தேராய் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து இந்த ஆமைகள் பிடிக்கப்பட்டதாக STF வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் மியான்மர் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்தல்காரர்களால் ஆமைகள் கடத்தப்பட இருந்தன.


மீட்கப்பட்ட ஆமைகள் பிறகு வனத்துறையினரால் மீட்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன