வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ளது கவுகாத்தி. கவுகாத்தி அருகே அமைந்துள்ள நகரம் சில்ஷர். இந்த நகரத்தில் வசித்து வந்தவர் ஜெய்தீப்ராய். மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு 27 வயதாகிறது. இவரது குடும்பத்தினர் கலைன் பகுதியில் வசித்து வருகின்றனர். ஜெய்தீப்ராய் வாடகைக்கு அறை எடுத்து சில்ஷரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததுள்ளார்.


இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஜெய்தீப் ராய் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரபரப்புக்கு வந்துள்ளார். அப்போது, தனது நேரலையில் பார்த்துக் கொண்டவர்களிடம், “ நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த பெண்ணிடம் கேட்டேன். ஆனால், அந்த பெண் அனைவருக்கும் முன்பாக என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அவரது மாமா என்னிடம் வந்து காதலை கைவிடாவிட்டால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார். என்னால் அந்த பெண்ணுக்கு எந்த தொந்தரவும் வர வேண்டாம். நான் இந்த உலகத்தை விட்டே போகிறேன்.




அம்மா. மாமா, அத்தை. அக்கா, அண்ணா உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஆனால், என் காதலியை நான் அதிகம் நேசிக்கிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ இயலாது.” என்று கூறிவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் நிகழ்ந்த உடனே இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது ஜெய்தீப் ராய் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.




உயிரிழந்த இளைஞரின் அண்ணன் ரூபம் கூறியதாவது, "என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் நாங்கள் புகார் அளிக்காமல் இருந்தோம். அந்த பெண்ணின் குடும்பத்தால் எனது தம்பிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனது தம்பிதான் எங்களது குடும்பத்தை கவனித்து வந்தான். எனது தம்பி நன்றாகவே சம்பாதித்து வந்தான். அதனால், அந்த பெண் குடும்பத்தினர் ஏன் எனது தம்பியை ஏற்கவில்லை என்றும் புரியவில்லை" என்றார்.


காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தால் காதலன் ஃபேஸ்புக்கில் நேரலையில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)