திருமண நிகழ்ச்சியில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாட்டை மாற்றுவதில் தகராறு:


கடந்த ஜூன் 7ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பரேய்லியில் திருமண விழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது திருமண டிஜே பார்ட்டியில் போடப்பட்ட பாட்டிற்கு கணேஷ் லால் மற்றும் அரவிந்த் குமார் என்ற இருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சென்ற ராஜூவ் குமார் பாடலை மாற்றுமாறு கேட்டுள்ளார். தொடர்ச்சியாக அதை வலியுறுத்தியும் உள்ளார்.ஆனால் பாட்டை மாற்ற மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு சண்டையை உள்ளூர்காரர்கள் தலையிட்டு விலக்கியுள்ளனர். ஆனால், பகை உணர்ச்சியில் இருந்த இருவரும் ராஜூவ் குமாரை பழிவாங்க திட்டமிட்டு, அவரது செயல்பாடுகளை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் கிராமத்திற்கு வந்த கணேஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் ராஜூவ் குமாரை ஆளில்லாத பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். 




ஆசிட் வீச்சு:


அங்கு, ஏற்கனவே வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராஜூவ் குமார் மீது ஊற்றியுள்ளனர். இதனால் ராஜுவ் குமாரின் உடல் எரியத்தொடங்கவே, வலியால் அலறித்துடித்துள்ளார். அங்கிருந்து ஓடிய அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் பரேய்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலில் 70% அளவிற்கு காயமாகிவிட்டது. உயிர் பிழைப்பது கடினம் தான் என்று கூறியுள்ளனர்.


தந்தைக்கும் கொலை மிரட்டல்:


இச்சம்பவம் ஜூலை 9ம் தேதி கஜூரியா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோகிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும், 24 வயதே ஆன தன் மகன் மீது ஆசிட் ஊற்றிய கணேஷ் மற்றும் அரவிந்த் மீது காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று ராஜூவ் குமாரின் தந்தை ஆசிராம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் தன்னையும் கொன்றுவிடுவேன் என்று இருவரும் மிரட்டுவதாக அவர் கூறியுள்ளார்.


இச்சம்பவம் பற்றி பேசியுள்ள காவல்துறை அதிகாரி வினய் வர்மா “ஆசிட் வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ராஜூவ் குமார் மற்றும் அவரது தந்தை ஆசிராமிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறோம். குற்றப்பத்திரிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.


டிஜே பார்ட்டியில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராற்று ஆசிட் வீச்சில் முடிந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.