மும்பையில் தாயை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மத்திய மும்பையில் உள்ள  லால்பாக் பகுதியில்  நேற்றைய தினம் (மார்ச் 14) 60 வயது நபர் ஒருவர் கலாசௌகி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என்றும், அவர் தனது 24 வயது மகளுடன் கலாசௌகி காவல்துறையின் எல்லைக்குட்பட்ட லால்பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் என அந்த நபர் தெரிவித்திருந்தார். 


உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காவல் ஆய்வாளர் ஆனந்த் முலே தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக காணாமல் போன பெண்ணின் வீட்டை  பார்வையிட்டனர். பின்னர் அவர் மகளிடம் விசாரணை நடத்தினர். 


இதில் போலீசாருக்கு மகள் கூறிய பதில், திருப்திகரமாக இல்லாத நிலையில், அவரது மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதேசமயம் ஒரு குழுவினர், வீட்டினுள் சோதனை நடத்தினர். இதில் அலமாரி ஒன்றிற்குள் பல பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


என்னவாக இருக்கும் என எடுத்துப் பார்த்தப் போது பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் காணாமல் போன பெண்ணின் உடல் பல துண்டுகளாக  வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறை அதிகாரிகள் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்  பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 


மேலும் சம்பவ இடத்தில் இருந்து கத்தி, மின்சார அறுவை இயந்திரம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.