கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு 23 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ரேஷன் அரிசியை வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்கு கடத்துவது தொடர் கதையாக இருந்து வந்தது, இந்த நிலையில் வேப்பூர் தாலுகா மாங்குளம் பகுதியில் கடந்த 26-ந்தேதி கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளர் ரேகாமதி, சப்-ஆய்வாளர் கவியரசன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில், அதில் 460 மூட்டைகளில் 23 ஆயிரம் கிலோ  (23 டன்) ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த மினி லாரியில் வந்த நபர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மங்களூர் காலனியை சேர்ந்த முத்துகருப்பன் மகன் ரஞ்சித் (வயது 25) என்பவரும், சித்ரவேல் என்பவரின் மகன் வேல் முருகன் (30), வேலூர் மாவட்டம் அரியூர்குப்பம் பகுதியை சேர்ந்த உலகமூர்த்தி என்பவரின் மகன் புருஷோத்தமன் (32), கோவிந்தன் என்பவரின் மகன் பெருமாள் (36), மற்றும் சங்கராம்பாளையத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (51), மங்களூர் காலனியை சேர்ந்த ராமலிங்கம் (56) ஆகிய 6 பேர் என்று தெரிந்தது.

 



 

 

மேலும் காவல் துறையின் விசாரணையில் அவர்கள் விளாம்பாவூர், வேப்பூர் மற்றும் மங்களூர் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்க ஆந்திராவுக்கு கடத்த முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரஞ்சித், வேல்முருகன், மற்றும் லாரி உரிமையாளரான ராமச்சந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சென்னை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

 



 

 

அதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் துறையினர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.