சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவத்தில் உடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கருதி, அதில் ஒருவர் கைதும் செய்யப்பட்டார். மீதமுள்ள நபர் காணாமல் போன நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டது. 


இந்தநிலையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 20 ஆண்டுகளாக தான் இறந்து விட்டதாக ஊரை நம்ப வைத்த 60 வயது முன்னாள் கடற்படை ஊழியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் இன்றைய டாப் டாபிக். முன்னாள் கடற்படை ஊழியர் அவரது உறவினரைக் கொன்றதோடு, இரண்டு தொழிலாளர்களை எரித்துக் கொன்ற குற்றத்திற்காக டெல்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் தற்போது 20 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.


முன்னாள் கடற்படை ஊழியர் பாலேஷ் குமார் என்ற தனது பெயரை அமன் சிங் என மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில், நஜாப்கரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.


என்ன நடந்தது..? 


கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில், பணத்திற்காக தனது மைத்துனரான ராஜேஷ் (எ) குஷிராம் என்பவரைக் கொன்ற போது பாலேஷுக்கு வயது 40 ஆக இருந்துள்ளது. மேலும், பாலேஷுக்கு ராஜேஷின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலைகளுக்கு பிறகு வழக்கில் தொடர்புடைய பாலேஷின் சகோதரர் சுந்தர் லாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், பாலேஷ் குமார் காவல்துறையினரிடம் இருந்து தப்பி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாகி இருந்துள்ளார்.


இதுகுறித்து சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர யாதவ் கூறுகையில், ”அப்போது போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருந்த பாலேஷ், ராஜஸ்தானுக்கு லாரியில் தப்பிச் சென்றுள்ளார். அவர் தனது டிரக்கை தீ வைத்து கொளுத்தி, தனது இரு தொழிலாளர்களை அதில் எரித்து கொன்றுள்ளார். ராஜஸ்தான் போலீசாரின் விசாரணையின் போது, இறந்த அந்த இரு நபர்களில் ஒருவர் பாலேஷ் என அடையாளம் கண்டுள்ளனர்,  பாலேஷின் குடும்ப உறுப்பினர்களும், அந்த உடல் அவருடையது என அடையாளம் கண்டனர். அவரது மரணத்தை போலியாகக் காட்டி, பாலேஷ் பஞ்சாபிற்கு தப்பிச் சென்று, தனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் போலி அடையாளச் சான்றினைப் பெற்று, தனது பெயரை அமன் சிங் என்று மாற்றிக் கொண்டார்.” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "பாலேஷ் தனது மனைவியுடன் தொடர்பில் இருந்துகொண்டு, இந்திய கடற்படையின் காப்பீட்டு தொகை, மற்றும் அவரது ஓய்வூதியத்தை மனைவிக்கு மாற்றியுள்ளார். மேலும், தானே எரித்த ட்ரக்க்கு இன்சூரன்ஸ் அப்ளே செய்து அதனையும் பெற்றதுதான் ஹைலைட். பின்னர் பலேஷ் தனது குடும்பத்துடன் டெல்லியின் நஜஃப்கருக்கு குடிபெயர்ந்து அவர்களுடன் வாழத் தொடங்கினார்.


இந்த சூழலில்தான் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல்துறையினரிடம் பாலேஷ் கைது செய்யப்பட்டது குறித்து ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள காவல்துறை அதிகாரியிடம், டெல்லி காவல்துறை தெரிவித்ததுடன், எரிக்கப்பட்ட ட்ரக் வழக்கை மீண்டும் திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது