சென்னையை சேர்ந்த துப்புறவு பணியாளர் ஒருவரை கத்தி முனையில் கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக வசித்த பெண்...
சென்னை அடையாறு பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவனை இழந்த அப்பெண் திருவல்லிக்கேணி பகுதியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்திருக்கிறார். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்வது வீடு திரும்புவது அந்த பெண்ணின் வழக்கம் . அப்படித்தான் கடந்த 20 ஆம் தேதி அந்த பெண் வீடு திரும்பிய பொழுது , வீட்டின் நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் வழி மறித்து நின்றிருக்கிறார். யார் என அறியாத அந்த பெண் “ நீங்கள் யார் ?.. என்ன வேண்டும் “ என கேட்டதாக தெரிகிறது. பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் , கத்தி முனையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
ஆபாசமாக வீடியோ..
மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக தனது மொபைலில் வீடியோ எடுத்த அந்த இளைஞர் , அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் . பின்னர் அந்த பெண்ணை தொடர்புக்கொண்டு நடந்ததை யாரிடமாவது சொன்னால் “உன்னை கொலை செய்துவிடுவேன் மேலும் உனது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் “ என மிரட்டியதாக அப்பெண் கூறுகிறார்.
வீடு திரும்பிய தனது மகளிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து அம்மாவை அழைத்துக்கொண்டு திருவான்மையூர் காவல் நிலையத்தில் மகள் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பெண்ணுக்கு மிரட்டல் அழைப்பு வந்த எண்ணை தொடர்புக்கொண்டு தேடுதல் பணியை துவங்கியுள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞர் மெரினா கடற்கரையில் இருப்பதை அறிந்த போலிசார், அங்கு வைத்தே அவரை கைது செய்துள்ளனர்.
சிக்கிய இளைஞர்..
விசாரணையில் அந்த இளைஞர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த எஸ் விஷால் என்பதும் வயது 20 என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவன் ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறான். சில தகவலின் படி அவன் கல்லூரியை இடை நிறுத்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து அவரது வீடு , பணி நேரம் உள்ளிட்ட விஷயங்களை அறிந்துக்கொண்டு திட்டமிட்டு இந்த குற்றச்சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிகிறது.
கைது செய்து அவனை முழுமையாக விசாரணை செய்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல்துறையினர் ,ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விஷாலை சிறையில் அடைத்துள்ளனர். அவனது மொபைல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.