நாமக்கலில் தேங்காய் வியாபாரியிடம் நடித்து வழிப்பறி செய்து தப்பிய இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெடுஞ்சாலைகளில் உதவி கேட்பது போல நடித்து மோசடியில் சில நபர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நபர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.


இப்படியான நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காமராஜபுரம் குறிச்சியைச் சேர்ந்தவர் பொன்னார். இவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புதூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இதனால் நேற்று முன்தினம் வழக்கம்போல இரவு 12 மணிக்கு நாமக்கலில் இருந்து காட்டுப்புதூருக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார். அவர் மோகனூர் அடுத்து அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே வந்தபோது சாலையில் ஒரு இளைஞர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகே இன்னொரு நபர் உதவிக்காக கூச்சலிட்டு கொண்டிருந்துள்ளார். 


இதனைப் பார்த்த பொன்னார் உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு அவர்கள் அருகே சென்று என்னவென்று விசாரித்துள்ளார். அப்போது வலிப்பு வந்த நபர், இன்னொரு நபர் ஆகிய இருவரும் பொன்னாரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், செல்போன், பைக் சாவி என அனைத்தையும் பறிமுதல் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.இந்த தாக்குதலில் காயமடைந்த பொன்னார் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதற்கிடையில் நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே பைக்கில் சென்ற இருவர் விபத்தில் உயிரிழந்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் விபத்தில் சிக்கிய இருவரும் பொன்னாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இன்னொருவர் முதலில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


உயிழந்தவர்களில் ஒருவர் நாமக்கல் கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த லாரி பட்டறை தொழிலாளி நவீன்  என்பதும், இன்னொருவர் சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த மாரி என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.