தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆர்யா. இவர் ஜெர்மனியில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஆர்யா மீது அந்த பெண் தமிழக காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக, அந்த பெண்ணிடம் நடிகர் ஆர்யா போல சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் முகமது உசைனி ஆகிய இருவரை போலீாசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவருக்கும் நடிகை சாயிஷாவிற்கும் திருமணம் நடைபெற்று, இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆர்யா மீது ஜெர்மனியில் வாழும் பெண் ஒருவர் மோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார். ஜெர்மனியில் வாழ்ந்து வரும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த புகாரில், தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூபாய் 70 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யாத காரணத்தால், நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விட்ஜா சார்பில் வழக்கறிஞர் ராஜபாண்டியன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுிவில் விட்ஜா, தான் அளித்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை திருப்பி அளித்துவிடுவதாக ஆர்யாவும், அவரது மனைவியின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர் என்றும், சாயிஷாவை 6 மாதத்தில் விவாகரத்து செய்துவிடுவேன் என்று உறுதியளித்ததால்தான் இந்த திருமணத்திற்கு தான் சம்மதித்தேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் அளித்த புகார் தொடர்பான தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆர்யாவின் பதிலை ஆடியோவாகவும், வீடியோவாகவும் போலீசார் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஆர்யா போல பேசி ஏமாற்றியதாக இருவரை போலீசார் கைது செய்திருப்பது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.