மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில், சென்னைக்கு  கடத்திக் கொண்டுவரப்பட்ட 2,600 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.  இவைகளை கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த பயணியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ இந்த சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளால், வெளிநாட்டு நோய்க்கிருமிகள், இந்தியாவுக்குள் பரவுவதோடு, நீர் நிலைகளும் பாதிக்கும் என்பதால், இந்த 2600 நட்சத்திர ஆமைகளையும், மலேசியா நாட்டிற்கே திருப்பி அனுப்ப, சுங்க அதிகாரிகள் முடிவு.



சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம்..


மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை நடத்தினார்கள். 



30 லட்சம் ரூபாய் மதிப்பு..


அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக, மலேசியா சென்றுவிட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார்.அவர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து உடமைகளை சோதித்த போது, அட்டைப்பெட்டிக்குள், சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமாக உயிருடன் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த அட்டைப் பெட்டிக்குள் சுமார் 2,600 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.30 லட்சம்.


மருந்துகள் தயாரிக்கப்படுகிறதாம்...


இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள், குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில், அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். அதோடு இவைகள் மருத்துவ குணங்கள் உடையவை. எனவே மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 



திருப்பி அனுப்ப முடிவு...



அதே நேரத்தில் இவைகளால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதோடு, வெளிநாட்டு நோய்க் கிருமிகளும் இந்தியாவுக்குள் பரவி விடும் என்பதால், இவைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று, சுங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு இந்த 2,600 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். 


 


எந்த விமானத்தில் இவைகள் கொண்டுவரப்பட்டதோ, அதே விமானத்தில், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கவும், அதற்கான செலவுகளை, மலேசியா நாட்டிலிருந்து, இவைகளை கடத்திக் கொண்டு வந்த பயணியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் இவைகளை மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த பயணியை, சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.


 


 


சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதை பொருள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. அதே போல் வெளிநாட்டில் இருக்கும் அரிய வகைஉயிரினங்களான பாம்பு, பல்லி, பச்சோந்தி, குட்டி வகை குரங்குகள், ஆமைகள் உள்ளிட்ட வையும் கடத்தப்படுவது அதிகரித்து இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது