தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்களுக்காக இந்தியா முழுவதும் அறியப்பட்டவை. ஆனால், பல நல்ல படங்களை அளித்து இருந்தாலும் நீண்ட காலமாக கன்னட திரையுலகம் பெரியளவில் இந்திய திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாமலே இருந்தது. அதற்கு அவர்கள் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்காமல் இருந்ததே காரணம் ஆகும்.


பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் மார்ட்டின்:


ஆனால், கே.ஜி.எஃப். படத்திற்கு பிறகு கன்னட திரையுலகத்தின் மீது மற்ற திரையுலகினர் கவனமும் திரும்பியுள்ளது. அங்கு வெளியாகும் ஒவ்வொரு பெரிய நடிகர்களின் படங்களையும் பான் இந்தியா படமாக வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்த வகையில், கே.ஜி.எஃப். போலவே மிகவும் பிரம்மாண்ட முறையில் கன்னடத்தில் உருவாகி வரும் திரைப்படம் மார்ட்டின். கன்னடத்தில் பிரபல நடிகராக உலா வருபவர் துருவ் சார்ஜா. இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மார்ட்டின்.


மிகுந்த எதிர்பார்ப்பு:


இந்த படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் உள்ளே செல்லும் இந்திய ராணுவ வீரராக துருவ் சார்ஜா நடித்துள்ளார். படத்தின் ட்ரெயிலர் இந்த படம் ஒரு ராணுவ வீரரின் கதையாக இருக்கும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது.


படத்தின் ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் இந்த படம் சிறந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் துருவ் சார்ஜா லெப்டினன்ட் பிரிகேடியராக நடித்துள்ளார். இந்த படத்தின் கன்னடத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏபி அர்ஜூன் இயக்கியுள்ளார்.


கே.ஜி.எஃப். போல வெற்றி பெறுமா?


இந்த படத்திற்கு மணிஷ் சர்மா மற்றும் ரவிபஸ்ரூர் இசையமைத்துள்ளனர். பாடல்களுக்கு மட்டும் மணிஷ் சர்மா இசையமைத்துள்ளார். வாசவி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ள இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியா, பெங்காலி, ஜப்பானிஸ் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படம் உலகெங்கிலும் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாக உள்ளது.


ட்ரெயிலரின் இறுதி காட்சியில் பீரங்கி துப்பாக்கியின் நுனிப்பகுதி தோட்டாக்கள் வெப்பத்தால் சிவந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இது கே.ஜி.எஃப். படத்தில் யஷ் பயன்படுத்தும் துப்பாக்கி சிவந்து இருக்கும் காட்சியை நினைவூட்டுகிறது. கே.ஜி.எஃப்.போல பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த மார்ட்டின் கே.ஜி.எஃப். படம் போல வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்த படத்தில் வைபவி, அன்வேஷி ஜெயின், சுக்ருதா வாக்லே, சிக்கன்னா, சாது கோகிலா, மாளவிகா அவினாஷ், நிகிடின் தீர், நவாப் ஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.