கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் மாடலாக உள்ளார். இவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் நீண்ட நாட்களாக நண்பராக இருந்துள்ளார். இவர்  கொச்சியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.


ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை :


மாடல் அழகியை அவரது தோழி நேற்று முன்தினம் இரவு கொச்சி எம்.ஜி சாலையில் உள்ள பார்ட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்திற்கு அந்த தோழியின் மூன்று ஆண் நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களை மாடல் அழகிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு 5 பேரும் சந்தோஷமாக மது அருந்தி நடனம் ஆடினர். பின்பு மது அருந்திய மாடல் அழகி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அவரை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி இளைஞர்கள் 3 பேர் அவரை காரில் ஏற்றியுள்ளனர்.


அப்போது அவரின் தோழி வேண்டுமென்றே அவர்களுடன் காரில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் பெண்ணின் நண்பர்களான 3 பேர் இரவு முழுவதும் அந்த இளம் பெண்ணை காரில் வைத்து பல பகுதிகளுக்கு சென்றுள்ளனர். பின்பு அந்த பெண்ணை ஓடும் காரில் வைத்து அந்த 3 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


மருத்துவமனையில் அனுமதி :


பின்பு, இளம்பெண்ணின் தோழியான ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்று அந்த பெண்ணையும் காரில் ஏற்றிக் கொண்டனர். காக்கநாடு பகுதியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டில் ராஜஸ்தான் தோழி நள்ளிரவில் வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார். பின்பு மயக்கம் தெளிந்த அந்த பெண் இதுபற்றி நண்பர்களிடம் தெரிவித்தார். பின்பு அவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


பின்பு அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவனை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது,” இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் :


முன்னதாக, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் சில நாட்களுக்கு முன்பு 18 வயது இளம்பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு பின்னர், நகரின் மத்திய பகுதியில் உள்ள சாலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆட்டோவில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். 


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.