Tanjore Murder Case:  தஞ்சாவூரில் காதலலியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள, காளீஸ்வரன் என்பவரைஇ காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இளம்பெண்ணை கொலை செய்த காதலன்:


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த அம்மு என்கிற சிவஜோதியை (19), ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது முன்னாள் காதலன் காளீஸ்வரன் கொலை செய்துள்ளார்.  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தலையில் முண்டு கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, தலைமறைவாகியுள்ள அந்த கொலையாளியையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.


முறிந்த காதல்:


தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு அம்மு என்ற சிவஜோதி(19) என்ற மகள் இருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(23). இவர், பேராவூரணியில் குடும்பத்துடன் தங்கி பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்  மற்றும் லாரி ஓட்டுனராகவும் பணியாற்றி வந்தார். அப்போது, காளீஸ்வரனுக்கும், சிவஜோதிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பெண் வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க,  காளீஸ்வரன் சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக அவ்வப்போது சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்துள்ளார். ஆனாலும்,  காளீஸ்வரனும், சிவஜோதியும் தொலைபேசி மூலம் பேசி வந்ததாக தெரிகிறது.


வாக்குவாதமும் - தகராறும்:


இதனிடையே,  மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில்  வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்த சிவஜோதி மிகுந்த வேதனை அடைந்து,  காளீஸ்வரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச, இருவருக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பு பேராவூரணி வந்த காளீஸ்வரன், குடிபோதையில் சிவஜோதி வீட்டுக்கு சென்று தகராறு செய்து உள்ளார். தன்னுடன் வந்து வாழ வேண்டும் என சிவஜோதியை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சிவஜோதி மறுப்பு தெரிவிக்க,  தகராறு தொடர்பாக அவரது பெற்றோர் பேராவூரணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


தலையில் கல்லைப் போட்டு கொலை:


தகவலறிந்து வந்த போலீசார், காளீஸ்வரன் குடிபோதையில் இருந்த காரணத்தால் அவரை கைது செய்யாமல் கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த காளீஸ்வரன், மீண்டும் சிவஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கதவின் பின்புறம் இருந்த முண்டுக்கல்லை எடுத்து சிவஜோதியின் தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவஜோதி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டதும் காளீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.


காவல்துறை விசாரணை:


இந்த சம்பவம் குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிவஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை நடந்த இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  தப்பியோடிய காளீஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.