Crime: டெல்லியில் 18 வயது சிறுவனை நடுரோட்டில் ஒரு கும்பல் சரமாரியாக அடித்து கொலை செய்தது பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. சமீபத்தில் கூட நடுரோட்டில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு கொடூர சம்பவங்கள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக, தலைநகர் டெல்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, நடுரோட்டில் ஒரு மைனர் கும்பல், 18 வயது சிறுவனை அடித்து கொலை செய்திருக்கிறது.
பகீர் வீடியோ:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது. இதில், ஒரு தெருவில் 18 வயது சிறுவன் நடந்துக் கொண்டிருந்தான். அப்போது, அந்த சிறுவனை 8க்கும் மேற்பட்ட மைனர் கும்பல் சுற்றி வளைத்தது. அதன்பின், அந்த கும்பல் சிறுவனை சரமாரியாக அடித்துள்ளது. சிறுவனின் முகம், வயிற்று பகுதி என கொடூரமாக அடித்திருக்கின்றன. வலி தாங்க முடியாமல் இந்த கும்பலிடம் சிறுவன் தப்பிக்க முயன்றான். அப்போதும் கூட விடாமல் அந்த மைனர் கும்பல், அடித்துள்ளது. ரோட்டில் சிறுவனை தரதரவென இழுத்துக் கொண்டே சரமாரியாக மைனர் கும்பல் அடித்துள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் இருக்கும் நபர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தனர். மைனர் கும்பல் சிறுவனை தாக்கிவிட்டு அங்கிருந்து கூலாக நடந்துச் சென்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த வடிந்தபடி நடந்து செல்வது போன்று வீடியோவில் உள்ளது.
என்ன காரணம்?
இந்த சம்பவம் டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறார்கள் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், படுகாயம் அடைந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்டவருக்கு, அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தகராறு நடந்துள்ளது. இதன் காரணமாக, மைனர் கும்பல் சிறுவனை கொலை செய்திருக்கிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.