ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். கடந்த 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கூறியுள்ளார். அது குறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. 



புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர். அதில் சிறுமி கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு சிறுமியின் தாய் இந்திராணி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி உள்ளிட்டோரை கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கருமுட்டை மருத்துவமனையில் இவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை செய்துகொடுத்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார். 


சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு, சேலம் மற்றும் ஓசூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர். 



முன்னதாக ஈரோடு மருத்துவமனையில் சோதனை செய்த சுகாதாரத்துறை கடந்த 6-ஆம் தேதி சேலம் வந்தனர். சுகாதாரத்துறை குழு சேலம் மாவட்டத்தில் சிறுமிக்கு சிகிச்சை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படை மருத்துவமனையில் உள்ள ஆவணங்கள், பதிவேடுகள் போன்றவற்றை சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். அதன்பின் இன்று 16 வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் சேலம் மற்றும் ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு ஈரோடு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் மருத்துவமனை, மருத்துவர்கள் என மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.