தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். துவக்கி வைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை காவல்துறை ஆணையரகம் அமைக்கப்படாத நிலை உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 இலட்சமாக இருந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியை வடக்கு தெற்கு என பிரிக்கும் வகையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள பக்கள் ஓடை நகரை நடுவில் அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்து உள்ளது.




தூத்துக்குடி தொழில் வளம் மிகுந்த நகரம் ஆகும். இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது, 857 தெருக்கள், சுமார் 174.770 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்து இருந்தன. இதில் 11.798 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலைகள், 111.87 கிலோ மீட்டர் நீள தார் சாலைகள், 18.668 கிலோ மீட்டர் நீள கல்தளம், 32.434 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் இருந்தன. இந்த சாலைகள் பெரும்பாலும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தற்போது பல சாலைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று குடிநீர் திட்டமும் மேம்படுத்தப்பட்டு 4-வது குடிநீர் குழாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இதனால் மாநகர மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பூங்காக்கள், விரிவுபடுத்தப்பட்ட சாலைகள், நடைமேடைகள், மழைநீர் வடிகால் குழாய், 49 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வாகன நிறுத்தம், நடைபாதைகள், பொது கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருந்து துவங்கும் சாலையில் தான் அரசு  மருத்துவக்கல்லூரி, பாலிடெக்னிக், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், தென்பாகம் காவல் நிலையம்,  மாநகராட்சி அலுவலகம்,  பேருந்து நிலையம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம், மத்திய பாகம் காவல் நிலையமென அனைத்தும் ஒரே சாலையில் அமைந்து உள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் என அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியாக இருந்தாலும் கூட குறுகலான சாலைகளால் போக்குவரத்து பிரச்சினை பிரதான தலைவலியாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.




தூத்துக்குடி மாநகராட்சியில் தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், சிப்காட், முத்தையாபுரம், தெர்மல்நகர், அனைத்து மகளிர் காவல் நிலையம், குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளது. இவை அனைத்தும் துணை காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு காவல் நிலையங்கள் இல்லாததால் குற்றச்செயல்கள் அதிகரித்தே வருகிறது. நகரில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் மாநகரம் முழுமையடையாத நிலையிலேயே உள்ளது. குறிப்பாக மாநகரமாக உருவான தூத்துக்குடியில் காவல்துறை ஆணையர் அலுவலகம், இதுவரை மாநகரில் போதுமான போலீசார் இல்லாத நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பல்வேறு வழக்குகள் விரைந்து முடிக்கப்படாமல் முடங்குவதற்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் இல்லாததே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 




இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, மாவட்டத்தில் புலனாய்வு செய்வதற்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் கண்காணிப்பதற்கும் போதிய அளவு உளவுத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை மாவட்டமாக இருப்பதால் கடற்கரை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் போன்ற அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளன. இதனை கண்காணிக்க போதுமான அளவு உளவுப் பிரிவு போலீசார் பணியில் இல்லை என்பதும் பெரும் குறையாக பார்க்கப்படுகிறது.




தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதால், ஆணையரகம் அமைக்க முடியும். அவ்வாறு அமையும் போது, காவல்துறைக்கு புத்துயிர் கிடைக்கும். அதே போன்று தேவையான பணியிடங்கள் நிரப்பப்பட்டு குற்ற சம்பவங்களில் ஏற்படும் தேக்க நிலையை சரிசெய்ய முடியும். மாநகராட்சியாக பெயரளவுக்கு மட்டுமே தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி உண்மையில் மாநகராட்சிக்கான அந்தஸ்தை ஒருங்கே பெறவில்லை. ஆகையால் மாநகர காவல்துறை அலுவலகத்தை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் அமைந்து உள்ள போலீஸ் நிலையங்கள் தவிர சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களையும் இணைத்து தூத்துக்குடி மாநகராட்சியில் ஆணையரகம் அமைப்பதற்கான பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்பட்டாலும் கூட இதுவரை அதற்கான எவ்வித அறிவிப்பாணை இல்லாதது குற்ற செயல்கள் அதிகரிக்க பிரதான காரணமாக உள்ளது என்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண