சத்தீஸ்கரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சத்தீஸ்கரில் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள விதான்சபா காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி  எட்டு வயது சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் தீவிரம் காட்டிய போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடினர். சரியாக ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமி அவர் வசித்து வந்த சத்து ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சிறுமி மரணம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.


அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதற்காக டிசம்பர் 7 ஆம் தேதி சிறுமியை யாரும் இல்லாத இடத்திற்கு அச்சிறுவன் அழைத்து சென்றுள்ளான். 


இந்த சம்பவத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக ஆதரவாளர்கள் ராய்ப்பூரில் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய பாஜக மூத்த தலைவர் சஞ்சய் ஸ்ரீவத்சவா, ஒட்டுமொத்த மாநிலமும் குற்றங்களின் இருப்பிடமாக மாறியுள்ளது. சத்தீஸ்கரில் நடக்காத குற்றங்களே இல்லை என்றும், சட்ட விரோத செயல்களின் மூலம் கிடைக்கும் வருவாய் போலீசார் மூலம் அரசுக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.